Tuesday 29 January 2008

கடவுச்சொற்களைச் சேமிக்காதீர்

கடவுச்சொற்களைச் சேமிக்காதீர்

இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஆகட்டும் ஃபைர்ஃபாக்ஸ் ஆகட்டும் உங்கள் கடவுச்சொல்லை (Password) சேமிக்கட்டுமா? என்று கேட்டால் வேண்டவே வேண்டாம் என்று கொடுத்துவிடுங்கள். நம்மில் பலருக்கு ஒரு துள்ளுபெட்டி (Popup Dialogbox) வந்தாலே அது என்னவென்று பார்க்காமல் சரி என்று கொடுப்பதே பழக்கமாக இருக்கும். உதாரணத்துக்கு நீங்கள் அறிவில்லாதவரா என்று கேட்டால் கூட ஆமாம் என்று சொல்லிவிடுவோம். படித்து என்னவென்று புரிந்துகொண்டு பதிலளிப்பது என்பதே இல்லை.

முக்கியமாக வலைஉலவு நிலையத்துக்கு (Browsing Centre) சென்று வலை உலா வரும்போது இது கூடவே கூடாது. அது என்ன கடவுச்சொல்லை ஒவ்வொருமுறை தர ஒரு சோம்பேரித்தனமா? உதாரணத்துக்கு http://www.nirsoft.net/utils/internet_explorer_password.html என்ற தளத்தில் கிடைக்கும் மிகச்சிறிய ஒரு உதவிக்கருவி உங்கள் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் சேமித்து வைத்திருக்கும் அனைத்து கடவுச் சொற்களையும் எடுத்துக் காட்டிவிடும். அப்புறம் அவ்வளவுதான்.

இது இப்படி என்றால் ஃபைர்ஃபாக்ஸ் இந்தக்கருவிகள் ஏதும் இல்லாமலேயே எடுத்துக் காட்டுகிறது. பின்வரும் வழியில் செல்லுங்கள், Tools>Options>Security>Show Passwords அங்கு சென்றதும் மீண்டும் Show passwords என்ற ஒரு இடத்தைச் சொடுக்கினால் அனைத்து கடவுச்சொற்களையும் தோலுரித்துக் காட்டுகிறது ஃபைர்ஃபாக்ஸ். யார் வேண்டுமானாலும் போய்ப் பார்க்கக் கூடிய இந்த இரகசிய இடங்கள் நமக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதில் அதிக கவனம் தேவை.

Post Comment

0 comments: